Search the blog

Custom Search

மனதைத் தைத்த விதை

posted by Hisham Hussain, Puttalam, Sri Lanka 



ஜூன் 23 - சர்வதேச விதையவர் தினம் தொடர்பான நிகழ்வொன்று இன்று (27-06-2013) நடைபெற்றது. இதன் நிகழ்ச்சித் தொகுப்பாளராக (தொழில்ரீதியாக)க் கடமையாற்றினேன்.

இந் நிகழ்வில் சுமார் 100 விதவைத் தாய்மார் வரை கலந்துகொண்டனர். அவர்கள் – விதவையாகக் கழியும் - தமது வாழ்க்கையின் பிரச்சினைகள், துன்ப துயரங்கள், எதிர்ப்புகள் – எதிர்பார்ப்புகள் என பல்வேறு உள்ளக் கிடக்கைகளை, கருத்துக்களைக் கலந்துரையாடினர். 

இதன்போது ஒரு சிங்கள இனத்து விதவைத் தாய் கூறிய வார்த்தையொன்று கூர்மையாக மனதைத் தைத்தது. அதுதான் உண்மை என்றும் அடிமனம் கூறியது. அவர் சொன்ன அந்த வார்த்தைகள் இதுதான்: “ස්වාමියෙක් හිටියනං දෙයියෙක් වගේ අපේ හැම දුකක්ම කියන්න පුළුවන්. අපේ දුක කියාගන්න කෙනෙක් නැහැ” (கணவன் இருந்தால் கடவுளைப் போல எங்கள் எல்லா கவலைகளையும் கூறலாம். எங்கள் கவலைகளைச் சொல்லிக்கொள்ள ஒருவர் இல்லை)

அந்த கணத்திலிருந்து அடி மனதைக் குடைந்துகொண்டிருந்த எண்ணத்தை, உடன் கவிதையாக, அந் நிகழ்வில் படித்தேன். சிறிய செவ்விதாக்கங்களுடன் உங்கள் வாசிப்புக்காகத் தருகின்றேன்.

விதவையல்ல! நீ - விதை வை ! 

விதையாக
வாழுவது
விதியாகலாம் - நீ
விதையாக
சாக வேண்டுமென்பது
விதி அல்ல !

சொந்தக் காலில்
நிற்கும்
துணிவுள்ளவளே – புதிய
சொந்தமொன்றைச்
சேரும் 
துணிவு வேண்டும் !

தனி மரமாக
ஒற்றையாக
நிற்பதேன்?
கனி மரமாகி
சுற்றத்தாருடன்
கிளை விட்டு வளரலாம்,
உற்ற
துணை மரத்தைச்
சார்ந்து செல்! 

உடன் கட்டையேறிய
சமூகத்து பெண்கள் – இன்று
குடும்பத்தின் தீபத்தை
ஏற்றுகின்றார், 
இத்தாவில் அணிந்த
வெள்ளைத் துணி
களையாதவர்கள் – இன்று
பல வர்ண ஆடையில்
பலம் பெறுகின்றார்.

கண்ணீர் துடைக்கும்
கையில்லை – ஊரார்
கதைகளை அடைக்கும்
வாசலில்லை - வளர்ந்த
பிள்ளைகளைக் காக்கும்
அரணில்லை – மனதின்
ஓசைகளைக் கேட்கும்
காதில்லை!

அத்தனை அத்தனை
இல்லைகளும் இல்லாமலாகும் – நீ
விதவைப் பதவியை
விரும்பித் துறந்தால் ! 

இன்று
விதவையாக வாழுவது
விதியாகலாம் – ஆனால்
விதவையாக
சாக வேண்டுமென்பது,
விதி அல்ல!!


അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

The posts/comments made by the members are not the opinion of the Admins nor do the Admins endorse the opinion of the members.

link

Related Posts Plugin for WordPress, Blogger...